மூவொரு கடவுள் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சியும் உண்டாகுக.
தொடக்கத்தில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக
ஆமென்
திருச்சிலுவை மன்றாட்டு
திருச்சிலுவை அடையாளத்தினாலே., தீய சக்திகளிடமிருந்து எங்களை மீட்டருளும். எங்கள் இறைவா தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
ஆமென்
இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல்
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, / உமது பெயர் தூயதுயென போற்றப்பெறுக! / உமது ஆட்சி வருக! / உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல / மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை / இன்று எங்களுக்கு தாரும் / எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை / நாங்கள் மன்னிப்பது போல / எங்கள் குற்றங்களையும் மன்னியும் / எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும் / தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்!
ஆமென்
மங்கள வார்த்தை மன்றாட்டு
அருள் மிகு பெற்ற மரியே வாழ்க / ஆண்டவர் உம்முடனே, / பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே! /உம்முடைய திருவயிற்றின் கனியாகிய யேசுவும் / ஆசி பெற்றவரே.
தூய மரியே / இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்குற எங்களுக்காக / இப்பொழுதும் / எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்.
ஆமென்
புனிதரின் திருஉருவத்திற்கு முன் சொல்லும் செபம்
இத்திருத்தலத்தில் மாண்புமிகு அரியணையில் கிருபையுடன் எழுந்தருளியிருக்குற புனித அந்தோணியாரே / புனிதம் விளங்கும் லீலியே / விலைமதிக்கப்படாத மாணிக்கமே / பரலோக பூலோக காவலே, கவலைப்படுவோர்க்கு ஆறுதலே, துன்புறுவோரின் மகிழ்வே, பாவிகளின் தஞ்சமே, உமது இன்பமான சன்னிதானம் தேடி வந்தோம். உமது திருமுகம் நோக்கி உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம். மகா வணக்கத்திற்குரிய புனித அந்தோணியாரே, நல்ல மேய்ப்பரே, அலகையை மிரட்டி ஓட்டுபவரே, திருச்சப்பையின் கருணையின் கண்ணாடியானவரே, உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும் நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீரே எங்கள் ஞானத்தந்தை என்பதை எங்களுக்கு காட்டியருளும், பிள்ளைகள் செய்த குற்றங்களை பிதமாதாக்கள் பாராட்டுவார்களோ? / உம்மை தேடி வந்த சிறியோர் பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லலுறுவோர்க்கு ஆறுதலாக வாரும். நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியார்கள் பேரில் தயவாயிரும், பரிசுத்த வெண்மையில் தூயதான தயாபரமே, தயை கடலே, தவிப்பவர்களுக்கு தடாகமே தனித்தவர்களுக்கு தஞ்சமே உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். தொலைதூரம் கடந்து நாடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய இன்னல்களினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் திருப்பயணம் பலனற்றதாகி போகுமோ? எங்கள் அழுகை கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? ஐயனே! எங்களின் அன்பான தகப்பனே எங்களை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை கையேற்று கொண்டு ஆசிர்வதித்தருளும். – ஆமென்
மன்றாடுவோமாக
இறைவா! புனித அந்தோணியாரை வணங்கி அவருடைய வரத்தை இரந்து சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிற திருப்பயணிகளாகிய அடியார்க்கு இறங்கியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்
ஆமென்
புனித அந்தோனியார் பிராத்தனை
ஆண்டவரே இரக்கமாயிரும் …
கிறிஸ்துவே இரக்கமாயிரும் …
ஆண்டவரே இரக்கமாயிரும் …
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் .
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
ஆதி பாவம் இல்லாமல் உற்பவித்த தூய மரியாயே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பக்தி சுவாலருக்கு ஒத்தவராகிய தூய பிரான்சிஸ்குவே ,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
விண்ணகத் திருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தபசின் மேலுள்ள புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தர்மத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருச்சிலுவை மிகவும் அன்பு செய்தவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தர்மநெறியில் மாறாத மனதை விரும்பினவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சிற்றின்ப ஆசையை வென்றவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தூய்மையில் லீலிமலரென புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இஸ்பானிய நாட்டின் நவநட்ச்சத்திரமான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நற்செய்தியை ஆர்வமுடன் போதித்த புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவாக்கின் தொனிசத்தமான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தூய ஆவியானவரின் படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அவிசுவாசிகளுக்கு பயங்கரமான உபதேசித்தவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பசாசுகளை நடுநடுங்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மீனோரென்கிறதுறவியருக்குப் படிப்பினையாகிய புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருத்தூதர்களுடைய கொழுந்தான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வழி தவறி செல்கிறவர்களுக்கு துணையான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அற்புதங்கள் செய்கிறவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சலிப்புள்ளவர்களுக்கு ஆறுதல் சொல்கிறவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குற்றமில்லாத மக்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஊமைகளை பேசச் செய்கிறவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உண்மைகளை போதிக்கிற போதகரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பேய்களை மிரட்டி ஒட்டுகிறவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நோயாளிகளைக் குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மரணமடைந்தவர்களை இறைவனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பிறவி குருடருக்கு பார்வை கொடுத்தவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
காணாமல் போனவைகளைக் காட்டி கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இழந்து போன பொருட்களைக் கண்டெடுக்க செய்கிறவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வழக்காளிகளுடைய உண்மையை பாதுகாக்கிறவரான புனித அந்தோணியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
விண்ணகத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
எளியோர்க்கு இரத்தினமான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஆழ்கடலில் மீன்களுக்குப் போதித்தவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருத்தூதருடைய குறையற்ற தூய்மையை நேசித்தவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நஞ்சு கலந்த உணவை ஆசிர்வதித்து அருந்தினவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புண்ணியமென்கிற வெள்ளாண்மையைப் பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உலகம் என்கிற அபத்தத்தை புறக்கணித்தவறான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஆழ்கடலில் தத்தளிப்பவர்களை காத்தவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உம்மை பார்த்து வேண்டிகொள்கிறவர்களுக்கு அன்பரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தேவரீரை புகழ்கிறவர்களுக்கு மன்றாடுகிறவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
எண்ணிறந்த ஆன்மாக்களை விண்ணகத்தில் சேர்ப்பித்தவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நன்னாக்கு அழியாத நற்றவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சிறு குழந்தை வடிவம் கொண்ட இறைமகனை கையில் ஏந்தினவரான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே,
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் ஆண்டவரே,
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே ,
எங்கள் மன்றாட்டை கேட்டருளும் ஆண்டவரே,
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே,
எங்களை தயைப்பண்ணி மீட்டருளும் ஆண்டவரே,
புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே! கவலைப்படுவோருக்கு மகிழ்ச்சி அளிப்பவருமாய் பாவ அக்கினியை விரைவில் அமர்த்துகிறவரும் உன்னத விண்ணகத்தில் இருக்கிற தந்தையுமான இறைவன் எளியவர்களாயிருக்கிற எங்களுக்கு விண்ணக பேரின்பம் தந்தருள மன்றாடுகிறோம்.
முதல்வர்::இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படி
துணைவர்::புனித அந்தோனியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா!புனித அந்தோணியாரை தலைசிறந்த போதகராகவும் எங்கள் தேவைகளில் பரிந்து பேசுபவராகவும்,உம்மக்களுக்கு அளித்தீரே,அவரது உதவியால்,நாங்கள் கிறிஸ்துவ வாழ்வின் நெறிகளைக் கடைபிடிக்கவும்,எங்களுக்கு நேரிடும் இன்னல்களிலெல்லாம்,உமது ஆதரவைக் கண்டு உணரவும் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.
புனித அந்தோனியாரை நோக்கி பொது மன்றாட்டு
எங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே, கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.
புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே!நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம பிள்ளைகளின் மன்றாட்டுக்களை கேட்டருரும். உமது ஆதரவை நாடிவந்துள்ள உம அடியார் எம்மீது உம கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியவற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.
எங்கள் அன்புக்குரிய புனித அந்தோனியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்திற்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும், மக்கள் யாவரும் மெய்யங் கடவுளைக் கண்டறிந்து தக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும்.
எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசிர்வதித்தருளும், எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம்.
ஆமென்.
காரியம் அனுகூலமடைய செபம்
ஓ ! தூய்மையின் வெண் லீலி மலரே!
உன்னத எளிமையின் முன் மாதிரியே!
மெய்யான தாழ்ச்சியின் கண்ணாடியே!
தூய்மை ஒளிரும் விண்மீனே!
மாட்சிமையில் இலங்கும் புனித அந்தோனியாரே!
உம் கரங்களில் பலனான இயேசு எழுந்தருளி வரும் பேற்றினைப் பெற்று அகமகிழ்ந்தீரல்லோ அதுபோல வல்லமையுள்ள உம்முடைய ஆதரவில் என்னையும் ஏற்றுக் காப்பாற்ற உம்மை வேண்டுகிறேன். ஆண்டவரிடம் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் மேலாய் துலங்குகிறதல்லோ? நீர் என்மீது இரங்கி எனக்கு அவசரமான இக்காரியத்தில் எனக்கு உதவி செய்ய வாரும். (தேவைகளை கூறவும்)
அக்கிரமமான ஆசைப்பற்றுதல் யாவற்றையும் என் நெஞ்சத்தினின்று அகற்றி அதை தூயதாக்கும், என் பாவங்களுக்காக நன் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும், என் அயலாரையும் அன்பு செய்யவும் எனக்கு வேண்டிய அருளை அடைந்து தாரும், இவ்விதமாக நான் இம்மையில் ஆண்டவரை சேவித்து மறுமையில் உம்மோடு அவரை தரிசித்து என்றும் போற்றிப் புகழ்ந்து வாழ்த்துவேனாக.
ஆமென்.
செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டுகள்
முதல் மன்றாட்டு :
பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே,புனிதம் மிளிரும் லீலி மலரே ,விலைமதிக்கப்படாத மாணிக்கமே ,திருச்சபையில் ஒளிரும் விண்மீனே வாழ்க !பெரும் பேறு பெற்ற புனித அந்தோனியாரே ,இறையன்பினால் சுடர் விட்டெரிகிற மெய்யான பக்திச் சுவாலகரே என் முழு இருதயத்தோடு உம்மை வணங்கி வாழ்த்துகிறேன் .
இறைவன் உமக்கு ஏராளமாய் அருளிய அனைத்து உதவி சகாயங்களுக்காக உம்மை துதிக்கிறேன்.என் அன்புக்குரிய புனித அந்தோனியாரே ,உமக்கு என் தோத்திரங்களை ஒப்புக் கொடுக்கிறதற்காக இதோ உமது திருஉருவத்தின் முன்பாக தாழ்ச்சியுடன் முழந்தாளிட்டு நிற்கிறேன்.இறைவனுக்கு மிகவும் பிரியமான அன்பரே ,நீர் செய்திருக்கிற வாக்குறுதியை நினைத்தருளும்.அடுத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை உமது உருவத்தை வந்து சந்தித்து வணங்குகிறவர்களுக்கு உமது தந்தையின் வல்லமையைக் காண்பித்தருள்வீரென்று நீர் எங்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறீரே ,நீர் இது வரையிலும் உமது வாக்குறுதியை இவ்வளவு பிரமாணிக்கமாய் காப்பாற்றி வருகிறீரே ,தகுந்தபடி உமது உதவியை மன்றாடினவர்கள் எல்லோரும் தாங்கள் கேட்ட உதவியை அடைந்தனரே!ஆகையால் நானும் என் நெஞ்சத்தை உமக்குத் திறந்து காட்டவும் ,என் தேவைகளை உம்மிடத்தில் முழு நம்பிக்கையுடன் எடுத்துக் கூறவும் இந்த ஆலயத்தில் வந்திருக்கிறேன்.உமது உருவத்தை உற்று பார்க்கும்போது எனக்கு கண்ணீர் ததும்புகிறது.ஆயினும் என் நெஞ்சம் மேல் நோக்கி எழும்புகின்றது.மாட்சிமை தாங்கிய அம்மேலான தலத்தினின்று நீர் என் பேரில் இரங்கியருளும்.உமது கரத்தில் ஏந்திய திருக்குழந்தை இயேசுவின் மீது நீர் கொண்ட அன்பினைக் குறித்து நான் உம்மை கெஞ்சிக் கேட்பதேதனில் ,என் தேவைகளையெல்லாம் அத்திருப்பாலனுக்குச் சொல்லி அவரிடத்தில் எனக்காக மனுப்பேச வேண்டுமென்பதாம்.
என் அன்புக்குரிய புனித அந்தோனியாரே எனக்கு உதவி செய்வது உமக்கு எவ்வளவோ எளிதாயிருக்கிறது.என் வேண்டுதல் கேட்கப்படுவதற்காக இறைவனிடத்தில் நீர் பேசுவதொன்றே போதுமானது.உம கரங்களில் நீர் அன்போடு அரவணைத்த திருக்குழந்தை இயேசு உம விண்ணப்பங்களைத் தள்ளிப்போட போவதில்லை.விண்ணகத்தில் அவரோடு அரசாண்டு வரும் இத்தினத்தில் உம்மை நேசிக்கவும் ,உம்மை மகிமைப்படுத்தவும் நீர் சொல்வதை கேட்கவும் ஆயிரமடங்கு அவர் ஆசையுள்ளவராயிருக்க மாட்டாரோ?
ஓ இயேசுவே !உம் புனித அந்தோனியார் பெயரால் நான் உம்மை மன்றாடுகிறேன்.ஓ அந்தோனியாரே!உம் நேச இயேசுவின் பெயரால் நநான் உம்மை கெஞ்சி கேட்கிறேன்.
ஓ இயேசுவே ! புனித அந்தோனியாரே உங்கள் கரங்களில் என் அனைத்து கவலைகளையும் அனைத்து ஏக்க கலக்கங்களையும் ஒப்புக் கொடுக்கிறேன்.இவ்வுலகில் உங்கள் தூய உருவங்களை மேரை மரியாதையோடும்,பக்தியோடும் நோக்கிப் பார்த்து வருகிற அடியேனுக்கு விண்ணகத்தில் என்றும் உங்களை முகமுகமாய்க் காண்கின்ற மேலான வரத்தைத் தந்தருளுங்கள்.-ஆமென்.
இரண்டாம் மன்றாட்டு :
துன்புறுவோரின் உறுதுணையான நண்பராய் ,துயருறுவோருக்கு ஆறுதல் உதவிகளை ஏராளமாய் பொழிகிறவராகிய ,பேரு பெற்ற புனித அந்தோனியாரே இத்தேவாலயத்தில் உம்மைத் தேடி வணங்க வருகிற பாவியின் மீது இரங்கியருளும்.பொலோனியா நகர பெண்ணொருத்திக்கு ஒரு தடவை நீர் கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்தியருளும்.தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை போய் தமது உருவத்தைச்
சந்தித்து வருவாயானால் என் மன்றாட்டு கையேற்றுக் கொள்ளப்பட்டதென்று நீ அறிந்து கொள்வாயென்று திருவுளம் பற்றினீரே ! இந்த கட்டளையை நிறைவேற்ற வேண்டி உமது உருவத்தை இக்கோயிலில் சந்திக்க வந்து உமக்கு முன்பாக மண்டியிட்டு என் தேவைகளை சொல்லிக் காட்டுகிறேன்.
பெரும் பேறுபெற்ற தூயவரே!இரக்கம் நிறைந்த பாத்திரமே!தூய்மை முதலிய அனைத்து புண்ணியங்களும் விளங்கும் மாணிக்கமே அடியேன் உம்மை வணங்குகிறேன்.உம உருவத்தின் முன் முழந்தாளிட்டு என் தேவைகளை உமக்கு சொல்லி காட்டி உமது இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.உமது பீடத்திற்கு அருகாமையிலின்றி வேறெங்கே நான் உமது அருகில் நெருங்குவேன்.தூயவராகிய நீர் என் கண்முன்பே நிற்பதைக் காண்பேனாகில் உம்மை கனப்படுத்த நான் எவ்வளவோ தீவிரத்துடன் ஓடி வருவேன்.உம் திருப்பாதங்களை பணிந்து முத்தமிட எவ்வளவோ ஆசிப்பேன்,உம்முடன் பேசவும் என் ஆவல் எவ்வளவோ பெரிதாயிருக்கும்.இக்கிருபை எனக்குக் கிடையாததினாலல்லோ ,உம்மைக் காணும் பேரு எனக்குக் கிடைத்தால் நான் உமக்கு எவ்வித மகிமைகளைச் செலுத்துவேனோ அந்த மகிமைகளையே உமது உருவத்திற்குச் செலுத்த ஆசிக்கிறேன் .
ஆகையால் புனித அந்தோனியாரே!நான் உம்மை வணங்குகிறதுமல்லாமல் நான் உமக்கு செலுத்த வேண்டிய மேரை மரியாதையோடு உம்மை பணிந்து உம்மை நோக்குகிறேன்.ஆன்மாக்களுக்கு உண்மையான ஆறுதல் தரும் உன்னதரான புனித அந்தோனியாரே! என் துன்மார்க்கங்களை முன்னிட்டு உமது ஆதரவை அடைய நான் தகுதியற்றவனென்பது முற்றிலும் உண்மை.எனினும் நீதிமான்களை மாத்திரமல்ல மெய்யான பக்தியோடு திடமான நம்பிக்கையோடும் உம்மை நாடிவரும் பாவிகளையும் ஆறுதல் படுத்த சித்தமாயிருக்கிறீர்.ஆகையால் என் நெருக்கடியான தேவைகளில் நான் அண்டி வந்து,என் முழு நெஞ்சத்தோடு உமது தயாளப் பெருக்கத்தை நோக்கி அபயமிடுகிறேன்.என் வேண்டுதல் உமது சன்னதி மட்டும் வரக்கடவது.உமது இரக்கமுள்ள நெஞ்சமோ என் பெருமூச்சுகளைக் கேட்கக்கடவது.
ஓ என் அன்புக்குரிய தந்தையே! என் இன்னல்களை நீர் அறிவீர்.நான் கேட்பதை கடவுளிடமிருந்து நீர் கொடுப்பீர்.உலகமெங்கும் அதிசயிக்கப்படும் உமது இரக்கப்பெருக்கத்தை நான் கொண்டாட விடை கொடுப்பீர்.என் மன்றாட்டை உமது கரங்களில் ஒப்புவித்து உமது பாதுகாவலில் வைக்கிறேன்.என் விருப்பங்களை இயேசுவுக்கு ஒப்புக்கொடும்.அவர் அவைகளைத் தமது திருச்சித்தத்தின்படி கேட்பாராக.
ஆமென்.
மூன்றாம் மன்றாட்டு :
பெரும் பேறுபெற்ற புனித அந்தோனியாரே!துன்புறுவோரின் ஆறுதலானவரே!எவ்வித பிணிகளையும் நிவர்த்தி செய்யும் சோர்வுறா மருத்துவரே,உலகமெங்கிலும் உம புதுமைகளைப் பிரபலியமாய்ப் பேசி வருகிறார்கள்.உள்ளபடியே உம் வல்லமையின் பெருமையே பெருமையாகும்.நீர் உயிரோடிருக்கையில் அநேகமாயிரம் ஆன்மாக்களைத் திருத்தக் கடவுள் உம்மைத் தெரிந்து கொண்டார்.விண்ணில் அவரோடு என்றும் அரசாளும் இத்தினத்திலே அனைத்து வலபமுள்ள கரத்தில் ஏராளமான புதுமைகளை செய்யுங் கருவியாக விளங்குகிறீர்.நீர் அவரை மன்றாடுகையில் அவர் மனிதர்களை நன்மைகளினால் நிரப்ப சித்தமாகிறார்.
ஆகையால் துன்புறுவோருக்கு ஆறுதலானவரே,முழு நம்பிக்கையுடன் உம்மை மன்றாடுகிறேன்.கடவுளிடத்தில் உமக்குள்ள மிகுந்த செல்வாக்கினைக் கொண்டு திடங்கொள்கிறேன்.துன்பப்படுகிறவர்களுக்கு மனுபேசுகிறவராக அவரால் நியமிக்கப்பட்டிருக்கிறீர்.நீர் என் வேண்டுதலுக்கு இரங்கி நான் உம்மிடத்தில் சொல்லிக் கொள்ளும் என் நெருக்கடியான இடறுகளில் என்னை ஆறுதல்படுத்தும்படி உம்மைக் கெஞ்சி கேட்கிறேன்.திவ்விய பபாலனான இயேசுவின் முன் நீர் உமது கற்புள்ள இருதயத்தில் அனுபவித்த சொல்ல முடியாத பாக்கியத்தையும் ,அத்திரு பாலன் உம் மீதுள்ள நேச நம்பிக்கையின் அடையாளங்களையும் காட்டுகையில் நீர் அனுபவித்த பேரானந்தங்களையும் பார்த்து உமது கரங்களில் ஏந்தின அந்நல்ல இயேசுவுக்கு என் நியாயமான ஆசைகளை எடுத்துக் காட்டும்படி உம்மை மண்டாடுகிறேன்.மீட்பர் இவ்வுலகில் உம்மை அனைத்து நன்மைகளாலும் நிரப்பினீரே!அவைகளைப் பார்த்து நீர் என்னை உம்முடைய பேரு பலன்களுக்குப் பங்காளியாக்கவும் நான் விரும்பும் உதவியை எனக்கு உறுதியாய் அடைந்து தந்தருள உம்மை பிராத்திக்கிறேன்.
ஓ ! மேலான புனித அந்தோனியாரே! உதாரணமுள்ள உம்மை பார்த்து நான் வேண்டிக்கொண்டது வீண்போகவில்லையென்று நான் உணரச் செய்தருள்வீராக.உமது பேரில் எனக்குள்ள பக்தி பற்றுதல் இதனால் அதிகரிப்பதுடன் உமது புனித நாமத்தை சகலருக்கும் முன்பாக நான் புகழ்ந்து கொண்டாடுவேன்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒலிவேத்து தோட்டத்தில் அவஸ்தையாயிருக்கையில் அவர் துவக்கி முடித்த மூன்று மன்றாட்டுகளுக்கு உண்டாயிருந்த நம்பிக்கையோடும்,அமைந்த மனதோடும் நான் இதோ உமது திரு உருவத்திற்கு முன்பாக ஒப்புக் கொடுத்த மூன்று மன்றாட்டுகளையும் முடிக்க ஆசையாயிருக்கிறேன்.அவரது வாயினாலும்,அவரது நெஞ்சத்தாலும் நித்திய பிதாவை நோக்கி அடியேன் அபாயமிட்டு சொல்லுகிறதாவது,என் தந்தையே!அனைத்தும் உம்மால் கூடியது துன்பத்திற்குரிய இப்பாத்திரத்தை என்னிடத்தினின்று அகலச்செய்து நான் கேட்கும் காரியத்தை தயவோடு எனக்கு அளித்தருளும்.தொடக்கத்திலும் இப்பொழுதும் என் மனதல்ல உமது திருவுளமே நிறைவேறக்கடவது.
ஆமென்.